அம்ரேலி :பொதுவாக நம் வீட்டில் வளரும் செல்லப்பிராணிகள் மீது சிலர் அளவு கடந்த அன்பு வைத்திருப்பார்கள். அந்த பிராணிகள் திடீரென இறந்துவிட்டால் அதனை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. பின்னர் அதனை ஊர்வலமாக எடுத்துச்சென்று மரியாதையுடன் அடக்கம் செய்வர்.
இது போன்ற செய்திகள் பல முறை நாம் கேட்டு இருப்போம். ஆனால் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய காருக்கு இறுதி சடங்கு செய்து இருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டம், பதர்ஷிங்கா கிராமத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் போலாரா. இவர் கடந்த 2013-14ம் ஆண்டில் வேகன் ஆர் என்ற காரை வாங்கியுள்ளார். இந்த கார் வந்த பிறகுதான் தனக்கு நற்பெயர் கிடைத்ததாகவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், அவர் நம்புகிறார். இதனால் அவர் தனது காரை குடும்பத்தில் ஒருவர் போல் பாவித்து கவனித்து வந்தார்.
காருக்கு இறுதி சடங்கு :நீண்டகாலம் ஓடியதால் காரில் அவ்வப்போது பழுது ஏற்பட தொடங்கி உள்ளது. இதனால் அவர் வேறு காரை வாங்கி இருக்கிறார். இருப்பினும், தன்னுடைய பழைய காரை விற்க சஞ்சய் போலாரா மனமில்லாமல் அதனை தனக்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்துவிட முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து இறுதிச் சடங்கிற்கான தேதியையும் குறித்து சிறப்பு அழைப்பிதழ்களையும் தயாரித்துள்ளார்.
இதனை தனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு கொடுத்து, இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைப்பார்த்த உறவினர்கள் முதலில் ஆச்சரியம் அடைந்தனர். எனினும், சஞ்சய் போலாரா முடிவினை யாரும் எதிர்க்கவில்லை. அதேநேரம் வினோதமான அந்த நிகழ்வைக் காண வருகை தரவும் முடிவு செய்தனர்.