மும்பை: 18வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26ஆம் தேதி 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு 2வது கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் மகாராஷ்டிரா, அசாம், குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடகா, கோவா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 மக்களவை தொகுதிகளுக்கு இன்று (மே.7) 3வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் மேற்கு மகாராஷ்டிரா, கொங்கன், மராத்வாடா பகுதிகளில் உள்ள 11 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடையும். பாரமதி, ராய்காட், உஸ்மானாபாத், லத்தூர், சோலாப்பூர், மாதா, சாங்லி, சதாரா, ரத்னகிரி - சிந்துராங், கோலாப்பூர் மற்றும் ஹட்கனங்கலே உள்ளிட்ட11 தொகுதிகளில் களம் கண்டுள்ள தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளின் 258 வேட்பாளர்களின் எதிர்காலத்தை 2.09 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.