அயோத்தி :உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரமாண்டமான முறையில், கலை நுட்பத்துடன் கட்டப்பட்டு உள்ள ராமர் கோயில் வரும் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், தனியார் துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். கும்பாபிஷேக விழாவை, உலகமே வியக்கும் வண்ணம் நடத்துவதற்கு உத்தர பிரதேச அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அயோத்தியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி மத்திய அரசு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களும் பிற்பகல் 2.30 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேசிய வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு வெளியிட்டு உள்ளது.
அதேபோல் பல்வேறு மாநில அரசுகளும் ஜனவரி 22ஆம் தேதி விடுமுறையை அறிவித்து உள்ளன. ராமர் கோயில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், மதுபான கடைகள் என அனைத்தும் அன்றைய தினம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மத்திய பிரதேச மாநிலத்திலும் பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு அனைத்து வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.