அமேதி:உத்தர பிரதேச மாநிலம் அமேதி, புர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் பேருந்தில் பயணித்த 38 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பேருந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 38 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் போது பேருந்தில் 65 பயணிகள் பயணித்ததாகவும் திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக் கெட்டு ஓடி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து பீகார் பதிவெண் கொண்டு இருந்த நிலையில், பீகாரில் இருந்து புது டெல்லி நோக்கி சென்று கொண்டு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த சமயத்தில் அருகில் இருந்த கிராம மக்கள் துரிதமாக செயல்பட்டு படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 17 பேர் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும், அதேநேரம் அவர்களுக்கு தீவிர காயம் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் நிலையில் இருந்து மீண்டு வந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சாலையில் பேருந்து கவிழ்ந்து கிடந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் உடனடியாக பேருந்தை மீட்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:"ஆம்ஸ்ட்ராங் கொலை கொடூரமானது.. தமிழக அரசு மீது நம்பிக்கை உள்ளது"- ராகுல் காந்தி கண்டனம்! - Rahul condemn BSP TN leader Murder