பாட்னா : விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பீகாரில் உள்ள முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 16 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் வஷிஷ்த் நாராயண் சிங் வெளியிட்டு உள்ளார்.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த முதலமைச்சர் நிதிஷ் குமார், அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திடீரென காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார். பீகாரில் மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளத்தில் 16 தொகுதிகள் ஒத்துக்கப்பட்டு உள்ளன.
பாஜக 17 இடங்களில் போட்டியிடுகிறது. ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சிக்கு 5 இடங்களும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிகளுக்கு தலா 1 இடம் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட உள்ள 16 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தேசியத் துணை தலைவர் வஷிஷ்த் நாராயண் சிங் வெளியிட்டார்.
16 பெயர்கள் கொண்ட ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்கள் பட்டியலில் ஒபிசி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் சிட்டிங் எம்.பிக்கள் 12 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சித்தமர்ஹியில் சுனில் குமார் பின்டுவுக்கும், சிவான் தொகுதியில் கவிதா சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் இஸ்லாமிய மக்கள் மெஜாரிட்டியாக உள்ள தொகுதிகள் ஐக்கிய ஜனதா தளம் வசம் தள்ளப்பட்டு உள்ளன. அண்மையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் ஐக்கிய ஜனதா தளத்தில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்கள் பட்டியலில் 6 ஒபிசிக்கள் மற்றும் 5 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர்கள் இடம் பெற்று உள்ளனர். தொகுதியில் உள்ள பெரும்பான்மை சமுதாயத்தை கவரும் வகையில் அந்த சமுதாயத்தை சேர்ந்தவரகளையே வேட்பாளர்களாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி தேர்வு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :"விரைவில் பொது சிவில் சட்டம் அமல்"- உத்தரகாண்ட் முதலமைச்சர் உறுதி! - Uniform Civil Code