பலோடா பஜார்:சத்தீஸ்கர் மாநிலம், பலோடா பஜார் மாவட்டத்தில் சத்னாமி சமூகத்தினர் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் 'ஜெய்ட்காம்ப்' என்ற வழிபாட்டுத் தலத்தை அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மே 15ஆம் தேதி இரவு பலோடா பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மத தூணை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் ஆவேசமான சத்னாமி சமூகத்தினர் சுமார் 5 ஆயிரம் பேர், நேற்று மர்ம நபர்களை கைது செய்யக் கோரியும், தனி விசாரணை குழுவை அமைக்கக்கோரியும் பலோடா பஜார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அது கலவரமாக மாறி போராட்டக்காரர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும், தடுப்புகளை உடைத்து ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து, கட்டிடத்தின் மீது கற்களை வீசி அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுக்கு தீ வைத்தனர். மேலும், ஆட்சியர் அலுவலகத்துக்கும், எஸ்பி அலுவலகத்துக்கும் தீ வைத்ததால் பெரும் பதற்றம் நிலவியது. மேலும், வன்முறையைத் தடுக்க முயன்ற காவலர்கள் பலர் காயம் அடைந்தனர். இதனிடையே, சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். ஆனால், தீயணைப்பு வாகனத்துக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
சம்பவம் குறித்து உடனடியாக தலைமைச் செயலகத்துக்கு தகவல் சென்ற நிலையில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உடன் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். பின்னர் உடனடியாக சம்பவ இடத்துக்கு ராய்ப்பூர் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளை அனுப்பி வைத்து, கூடுதல் போலீசாருடன் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.