புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு, வருகின்ற 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு எழுத புதுச்சேரி பகுதியில் 31 தேர்வு மையங்களும், காரைக்கால் பகுதியில் 9 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதுச்சேரியில் 44 அரசு மற்றும் 86 தனியார் பள்ளியைச் சேர்ந்த 11,994 பள்ளி மாணவர்களும், 387 தனித்தேர்வர்களும் தேர்வெழுதுகின்றனர்.
இதே போன்று, காரைக்கால் பகுதியில் பிளஸ் டூ தேர்வினை 11 அரசு மற்றும் 17 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2,187 பள்ளி மாணவர்களும், 120 தனித்தேர்வர்களும் தேர்வெழுதுகின்றனர். தேர்வு அறைக்குள் மாணவர்கள் கால்குலேட்டர், மொபைல் போன் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.