கன்னியாகுமரி: மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் 53 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.குமரி மாவட்டத்திற்கு சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து அதிகம் பேர் வந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் மூலம் குமரியில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது.இந்நிலையில் கருங்கல் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் தற்காலிக பணியாளராக லேப் டெக்னீசியன் (ஆய்வக நுட்புனர்) பணியில் இருந்த ஒருவருக்கு தொடர் காய்ச்சல், சளி தொல்லை ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்ததில் அவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இவரது உறவினர்களுக்குச் சோதனை செய்யப்பட்டது. அப்போது இவரது உறவினர்கள் நான்கு பேருக்கு கரோனா இருந்தது தெரியவந்தது. அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதேபோல் ஆரல்வாய்மொழி, களியக்காவிளைச் சோதனைச்சாவடியில் நடைபெற்ற பரிசோதனையில் மேலும் ஒன்பது பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து இவர்களும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.குமரி மாவட்டத்தில் இதுவரை 125 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதில் கரோனா பாதிக்கப்பட்டு உடல்நலம் சீராகி 70 பேர் வீடு திரும்பியுள்ளனர். 53 பேர் சிகிச்சையில் உள்ளனர். இரண்டு பேர் இறந்துள்ளனர்.இதையும் படிங்க: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்: பிறந்தநாளில் உயிர் பிரிந்த சோகம்!