ஆபத்தை அறியாமல் அருவியில் ஆட்டம் போடும் இளைஞர்கள் - சமூக ஆர்வலர்கள் வருத்தம் - மேட்டுப்பாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலை
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: குன்னூர், உதகை மற்றும் கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பகல் நேரங்களில் கன மழைப் பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மண் சரிவு, மரங்கள் சாய்தல், போக்குவரத்து பாதிப்பு போன்றவைகள் ஏற்பட்ட நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் புதிய நீருற்றுகளும் லாஸ் நீர்வீழ்ச்சி (laws falls) கேத்தரின் நீர்வீழ்ச்சி (catherine falls) போன்ற பகுதிகளிலும் மழை நீர் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
தற்போது சுற்றுலாப் பயணிகள் மற்றும் இளைஞர்கள் கூகுள் மேப் மூலம் அருவிகளை கண்டறிந்து அப்பகுதிகளுக்கு சென்று குளிப்பது வாடிக்கையாகி வருகிறது. இதேப் போன்று மேட்டுப்பாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள அருவிகளில் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் அப்பகுதிகளுக்குச் சென்று நீச்சல் அடித்து குளித்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போது கேத்தரின் நீர்வீழ்ச்சியில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதே போன்று அருவிகளில் இளைஞர்கள் உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளதால் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் வனப்பகுதியில் உள்ள அருவிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என்றும் அப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர். இதன் காரணமாக பல உயிரிழப்பைத் தடுக்க முடியும் எனவும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.