பல்லால் கடித்து 165 கிலோ எடையை தூக்கி 9ஆவது உலக சாதனைப் படைத்த இளைஞர் - ஹேமர் ஹெட்மேன்
🎬 Watch Now: Feature Video
பிகார்: கைமூர் லால் மற்றும் 'ஹேமர் ஹெட்மேன்' என்று அழைக்கப்படும் தர்மேந்திர குமார், ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார். இவர் சமீபத்தில் பைக்கை தோளில் தூக்கிக்கொண்டு 100 மீட்டர் ஓடி உலக சாதனைப் படைத்தார். மேலும் தற்போது 165 கிலோ எடையை பற்களால் தூக்கி புதிய உலக சாதனைப் படைத்துள்ளார். தர்மேந்திர குமார், தனது பற்களால் 165 கிலோ எடையை 10 விநாடிகளுக்கு தூக்கி, நேதாஜி அமைப்பில் உலக சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
திரிபுரா தலைநகர், அகர்தலாவில் இந்த சாதனைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனை மட்டுமல்லாமல் தர்மேந்திரா இதுவரை 9-வது உலக சாதனைப் படைத்துள்ளார். "வங்காளத்தில் இருந்து வந்தவர்கள், 165 கிலோ எடையை தூக்குவதற்கு எனக்கு சவால் விட்டனர். நான் அந்த சவாலை ஏற்று, 165 கிலோ எடையை பற்களால் தூக்கி நேதாஜி அமைப்பின் உலக சாதனை புத்தகத்தில் என் பெயரை பதிவு செய்தேன். இதை என் நாட்டு மக்களுக்காக செய்தேன். நான் மிகவும் பாக்கியசாலி, இன்று இத்தகைய சாதனையை செய்துள்ளேன். எதிர்காலத்திலும் பல புதிய உலக சாதனைகளைப் படைப்பேன்" என்றார்.
தர்மேந்திர குமார், பிகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ள ராம்கார் நகரில் வசிப்பவர். மேலும், தர்மேந்திரா திரிபுரா மாநில ரைபிள்ஸ் பிரிவில் ஜவானாக பணியாற்றி வருகிறார். தர்மேந்திராவின் சாதனைகளை போற்றும் வகையில் அவருக்கு சிறப்பு அதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் பல அற்புதமான சாதனைகளை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்திலும் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார்.
மேலும் இவருக்கு இந்தியாவின் 'சுத்தியல் தலை மனிதன்' என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இவர் சர்வதேச போட்டியில் தலையில் தேங்காய் உடைப்பது, பல்லால் இரும்பு பட்டையை வளைப்பது, தலையால் கம்பிகளை வளைப்பது, பைக்கை தோளில் சுமந்து கொண்டு ஓடுவது, பற்களால் எடையைத் தூக்குவது என பல சாதனைகளில் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார். அவரது சாதனைகளால் தர்மேந்திரா மிகவும் பிரபலமாக காணப்படுகிறார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் உரை அதிருப்தி அளிக்கிறது - ராகுல் காந்தி