அக்காவுக்கு கார் ஓட்ட சொல்லிக்கொடுத்த போது ஆற்றில் விழுந்த கார்.. சிதம்பரத்தில் நடந்தது என்ன? - கார் ஓட்ட சொல்லி கொடுக்கும் போது நேர்ந்த சோகம்
🎬 Watch Now: Feature Video


Published : Sep 11, 2023, 8:05 PM IST
கடலூர்: சிதம்பரத்தில் நகைக்கடை நடத்தி வரும் மங்கேஷ்குமார் என்பவரது மனைவி சுபாங்கி (42). இன்று காலை சுபாங்கியின் தம்பி நாம்தேவ் தனக்கு சொந்தமான காரில் வடக்கு பிச்சாவரம் பகுதியில் சுபாங்கிக்கு கார் ஓட்டும் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் வடக்கு பிச்சாவாரம் வடிகால் ஆற்றில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து உடனடியாக சுதாரித்து கொண்ட நாம்தேவ் காரை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் அவரது சகோதரி சுபாங்கி காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டார்.
காரை விட்டு வெளியே வந்த நாம்தேவ், சாலைக்கு ஓடிவந்து அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து, தனது கார் ஆற்றில் கவிழ்ந்ததாகவும், தனது அக்கா காரில் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் ஆற்றில் இறங்கி காரை தேடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிதம்பரம் தீயணைப்பு துறையினர், காரையும், அதில் இருந்து சடலமாக சுபாங்கியையும் மீட்டனர். பின்னர் உடலை கைப்பற்றிய அண்ணாமலை நகர் போலீசார் உடற்கூராய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோடு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.