காற்றாலை மீது விழுந்த இடி! பற்றி எரிந்த காற்றாலை - பெரும் சேதம் தவிர்ப்பு! - Kethanur
🎬 Watch Now: Feature Video
Published : Oct 16, 2023, 11:55 AM IST
திருப்பூர்: பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. கேத்தனூரில் இருந்து மானாசிபாளையம் செல்லும் சாலையில் ஏராளமான காற்றாலைகள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் ஒரு காற்றாலை மீது திடீரென இடி இறங்கியது. இதில் அந்த காற்றாலை முழுவதும் தீப் பற்றி எரியத் தொடங்கியது.
இந்த காற்றாலை அமைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆவதாகவும், கடந்த ஆறு வருடங்களாக காற்றாலை இயங்கவில்லை எனவும் காற்றாலை இயங்காமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள், விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காற்றாலையின் அருகில் வீடுகள், கால்நடைகள் எதுவும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த காற்றாலை ஹை டெக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானதாகவும், இயங்காமல் இருந்த காற்றாலையை அப்புறப்படுத்தாமல் இருந்ததே விபத்துக்கு காரணம் எனவும் இதுபோன்று ஏராளமான காற்றாலைகள் இயங்காமல் உள்ளதாகவும் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.