"அதிமுக கொடுத்த வெள்ளி டம்ளரில் டீ போடுங்க" - ஈரோட்டில் வைரலாகும் வீடியோ! - நாம் தமிழர் கட்சி
🎬 Watch Now: Feature Video
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதியில் வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் சுயேட்சைகள் என 77 பேர் வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர்.
தேர்தல் பிரச்சாரம் நாளை(பிப்.25) மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், தற்போது அனல் பறக்கும் இறுதிப் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை, கொலுசு, பிரியாணி, செல்போன், ஸ்மார்ட் வாட்ச், குக்கர், மிக்ஸி என பல்வேறு பொருட்கள் சட்டவிரோதமாகப் பரிசுப் பொருட்கள் வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்மணி ஒருவர் கையில் குக்கருடன் சாலையில் நின்று பேசிக்கொண்டிருப்பதும், அது காங்கிரஸின் 'கை' சின்னத்திற்கு வாக்களிக்கக்கோரி அக்கட்சியினர் கொடுத்ததாகவும் கூறுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது, இளைஞர் ஒருவர் தனது விரலில் சிறிய அளவிலான சில்வர் டம்ளர் ஒன்றை மாட்டியபடி எடுத்து வந்து அதனை தேநீர் கடைகளில் கொடுத்து அதில் டீ போட்டுக்கொடுக்கும்படி டீ மாஸ்டர்களிடம் கேட்கிறார். அப்போது இது என்ன தம்பி? என டீ மாஸ்டர் கேட்டபோது, "இது ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவினர் கொடுத்த பரிசு" என்று அந்த இளைஞர் கூறுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. வீடியோவில் உள்ள அந்த இளைஞர் பற்றிய விபரம் தெரியவில்லை. ஆனாலும் சம்பந்தப்பட்ட வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.