ஒகேனக்கலில் பரிசல் ஓட்டிகள் அராஜகமா? சுற்றுலா சென்ற இளைஞர்களை தாக்கிய வீடியோ - ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள்
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தற்போது கோடை சீசன் என்பதால் தினமும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்து வருகின்றனர். அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகையைப் பயன்படுத்திக் கொண்ட பரிசல் ஓட்டிகள் அரசு நிர்ணயத்தை கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக வசூல் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு ரூ.750 மற்றும் கட்டணமாக நிர்ணயித்துள்ளது. ஆனால், டிக்கெட்டுகளை பரிசல் ஓட்டிகள் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்கின்றனர். பரிசல் பயணம் செய்ய நான்கு நபர்களுக்கு ரூ.4000 கொடுத்தால் மட்டுமே பரிசல் இயக்கப்படும் என அடாவடி செய்து வசூல் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கேட்ட பணத்தைத் தர மறுக்கும் சுற்றுலாப் பயணிகளை ஆற்றில் மறுகரைக்கு அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வர மறுத்துவிடுவதாக படகு ஓட்டிகள் மிரட்டல் விடுகின்றனர். இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த இளைஞர்கள் ஒகேனக்கலை சுற்றிப்பார்க்க இன்று (மே.12) வந்துள்ளனர். அப்போது அதிகப்படியான கட்டணம் கேட்டு பரிசல் ஓட்டிகளுக்கும் பெங்களூரு இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பரிசல் ஓட்டிகள் ஒன்று கூடி, பெங்களூர் இளைஞர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் சுற்றுலாத் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் ஆகியவை தலையிட்டு ஒகேனக்கல்லில் படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? அல்லது அரசு நிர்ணயம் செய்த விலையே வசூலிக்கப்படுகிறதா? என தீவிர விசாரணை நடத்த வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே, சுற்றுலா வந்த இளைஞர்களை தாக்கியவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலரும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.