thumbnail

100 களத்தில் தோல்வி காணாத கோயில் காளை.. கவரயப்பட்டி கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி!

By

Published : Apr 18, 2023, 10:53 AM IST

திண்டுக்கல்: நத்தம் அருகே வத்திபட்டி அடுத்த கவரயப்பட்டியில் மந்தை முத்தாலம்மன் கோயில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இக்கோயிலுக்குக் கிராம மக்கள் சார்பில் காளை மாடு வளர்க்கப்பட்டு வந்தது. கவரயப்பட்டி கோயில் காளையைக் கிராம மக்கள் தங்கள் வீட்டுச் செல்லப் பிள்ளையாக நினைத்து வளர்த்து வந்தனர்.

மந்தை முத்தாலம்மன் கோவில் மாடு அலங்காநல்லூர், பாலமேடு, சிராவயல், தவசிமடை, கொசவபட்டி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாடிவாசல்களில் பங்கேற்று களத்தில் தோல்வி காணாத காளையாகவும், புகழ்பெற்ற பல ஜல்லிக்கட்டுக்குச் சென்று தங்கம், வெள்ளி, பீரோ, கட்டில் பல பரிசுகளைப் பெற்று ஊருக்கும் கோயிலுக்கும் பெருமை சேர்த்த காளையாகும்.

இந்த காளைமாட்டை யாரும் கட்டிப்போடுவதில்லை. இந்த காளை வீடு வீடாகச் சென்று கிராம மக்கள் தரும் பழம், வைக்கோல் போன்றவற்றைச் சாப்பிடுவது வழக்கம். மேலும் வயலில் மேய்ந்தாலும் இந்த மாட்டை மக்கள் விரட்டி அடிக்க மாட்டார்கள். கடந்து செல்லும் யாரையும் மாடு முட்டுவதும் இல்லை. அவ்வாறு கிராம மக்களுடன் பாசமாகப் பழகி வந்த காளை உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (ஏப்.17) உயிரிழந்தது.

கோயில் காளை இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். இறந்த காளைமாட்டின் உடல் அலங்கரிக்கப்பட்டு கோயில் முன்பு வைக்கப்பட்டது. இறந்த கோவில் காளைக்கு மாலைகள் அணிவித்து சந்தனம், ஜவ்வாது, வேஷ்டி, துண்டுகள் போன்றவற்றை அணிவித்து கண்ணீர் மல்க அப்பகுதி கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காளைக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். பின்னர் அதிர்வேட்டு முழங்க, தாரை தப்பட்டைகள் அடிக்கப்பட்டு காளைமாடு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.