காவல்துறை கட்டுப்பாட்டால் லியோ ரிலீஸை கொண்டாட முடியாமல் குமறும் விஜய் ரசிகர்கள்!
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களான த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இதற்கு முன்பு வெளியான படத்தின் அப்டேட்கள், பாடல்கள் மற்றும் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், தமிழக அரசின் சார்பில் படத்திற்கு சிறப்பு காட்சி திரையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், காலை 4 மணி காட்சிகள் கேட்டு பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடினாலும், அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.
அதேபோல் காலை 7 மணி காட்சி கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தபோதும், அதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் லியோ திரைப்படம் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் கொண்டாடினர். அந்த வகையில், ஒசூரில் 4 திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியானது.
திரைப்படம் வெளியாகும் நாளில் பிரமாண்ட பேனர்கள், ஆடல் பாடல் போன்ற எந்த விதமான கொண்டாட்டங்களும் கூடாது எனவும், அதனை மீறி கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தனர். இதனால் ஓசூரில் எவ்வித கொண்டாட்டங்களும் இன்றி ரசிகர்கள் ஏமாற்றத்துடன் சென்றதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி சுரேஷ் தெரிவித்துள்ளார்.