ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்... காப்பாற்றிய ரயில்வே காவலர்! பதற வைக்கும் சிசிடிவி வீடியோ... - சேலத்தில் ஓடும் இரயிலில் தவறி விழுந்த பெண்
🎬 Watch Now: Feature Video


Published : Dec 10, 2023, 5:29 PM IST
சேலம்: கேரளம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களுக்குச் செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள், சேலம் ரயில் நிலையம் வழியாகச் செல்லும். இந்த நிலையில், நேற்று (டிச.09) இரவு யஷ்வந்த்பூரில் இருந்து வந்த ரயில் (வண்டி எண்: 16527) சேலம் ரயில் நிலையத்தில் நடைமேடையில் நின்றது. அப்போது, ரயிலிலிருந்து மூன்று நபர்கள் கீழே இறங்கி தண்ணீர் மற்றும் நொறுக்குத் தீனி வாங்கிக்கொண்டு ரயிலில் ஏற முயன்றனர்.
ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பாகவே ரயில் புறப்பட்டுவிட்டதைக் கண்டு, வேக வேகமாக ஓடி வந்து ரயில் ஏற முயன்றனர். அப்போது அவர்களில், ஒருவரான ஸ்ம்ருதி தேவராஜ் என்ற பெண் பயணி நிலை தடுமாறி, ரயில் நிலைய நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் கீழே விழுந்தார். இதைக் கண்ட பணியிலிருந்த ரயில்வே காவலர் அஜித், நொடிப்பொழுதும் தாமதிக்காமல் விரைந்து செயல்பட்டு அந்த பெண் பயணியை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் இடது காலில் சிறு காயத்துடன் பெண் பயணி ஸ்மிருதி தேவராஜ் உயிர் தப்பினார்.
ரயில்வே நிலையத்தில் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அடுத்த வந்த ரயிலில் மூவரும் கோழிக்கோடு செல்ல பத்திரமாக வழி அனுப்பி வைக்கப்பட்டனர். கீழே விழுந்த பெண் பயணியை விரைந்து காப்பாற்றிய ரயில்வே காவலருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண் பயணியை ரயில்வே காவலர் காப்பாற்றிய சம்பவத்தின் சிசிடிவி வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.