தேங்கிய நீரை பல நாட்களாக அப்புறப்படுத்தவில்லை எனப் புகார்.. கதிர் ஆனந்த் எம்.பி. காரை வழிமறித்து பொதுமக்கள் வாக்குவாதம்! - கழிவுநீர் தேக்கம்
🎬 Watch Now: Feature Video
Published : Nov 18, 2023, 6:14 PM IST
பேரணாம்பட்டு: வேலூரில் பல நாட்களாக தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றக் கோரி நாடாளுமன்ற உறுப்பினரின் காரை வழிமறித்து பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு LR நகர் பகுதியில் உள்ள பிரதான சாலையில் பல மாதங்களாக கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்பதாக தெரிகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாலும், கொசு தொல்லை ஏற்படுவதாகவும், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இன்று (நவ. 18) பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி கிராமத்தில் திமுக கட்சியைச் சேர்ந்த ஒருவரின் இறப்பிற்கு எம்எல்ஏ மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளனர்.
இதை அறிந்து கொண்ட அப்பகுதி மக்கள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வாகனத்தை தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்களிடம் பேசி அங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வாகனத்தை அப்புறப்படுத்தினர்.