Video:'காசு.. பணம்... துட்டு... மணி.. மணி' - வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படும் காட்சி!
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் உள்ள அரசினர் தோட்டம் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சார் பதிவாளராக யாகியாக்கான் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இங்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அலுவலகப் பணிகளை மேற்கொள்ள கிருஷ்ணகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மணி என்பவர், தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு இங்கு அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பத்திரப்பதிவு தொடர்பாக சார்பதிவாளர் அலுலகத்திற்கு வந்த பயனாளியிடம் தற்காலிகமாக பணியாற்றி வரும் மணி கையூட்டு பெற்றுள்ளார். அவர் கையூட்டு பெரும் காட்சியை அங்கு உள்ளவர்கள் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய ஆவணங்களை பாதுகாக்கக்கூடிய சார் பதிவாளர் அலுவலகத்தில் தற்காலிகப் பணியாளர்களை பணியமர்த்தி, அங்கு பணிகளை மேற்கொள்ள வைப்பதால் முக்கிய ஆவணங்கள் வெளியே கசியும் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு தற்காலிகமாக பணியில் அமர்த்தும் நபர்கள் மூலம் அங்கு வரும் பயனாளிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க கையூட்டு பெற வைப்பதும் சார்பதிவாளர் அலுவலகத்தில் அரங்கேறி வருவதாகவும், இதை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது