தஞ்சையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய வைகாசி திருவிழா - musics
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கிராமத்தில் ஸ்ரீமாரியம்மன் மற்றும் ஸ்ரீமலையேறி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். சுதந்திர போராட்ட காலத்தில் இங்கு ஆங்கிலேயர்கள் தேவாலயம் அமைத்து அதன் மூலம் கல்வி வழங்கியதால் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளையும், டாக்டர்களையும், காவல்துறை அதிகாரிகளையும் பல்வேறு வெளிநாடுகளில் மிகப்பெரிய பதவியில் வகிப்பவர்களையும் கண்ணந்தங்குடி கிராமம் உருவாக்கியுள்ளது.
பல வெளிநாடுகள் மற்றும் பல மாநிலங்களுக்கு இவர்கள் சென்றாலும், தமிழர்களின் பாரம்பரியமான சிலம்பாட்டம், கிட்டியடித்தல், பறை இசை, தாள வாத்தியங்கள் என எதையும் மறக்காமல் சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பாரம்பரிய வாத்தியங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் வைகாசி மாதத்தில் தங்களது சொந்த ஊரான கண்ணந்தங்குடி ஊரில் ஸ்ரீமாரியம்மன் மற்றும் ஸ்ரீமலையேறி அம்மன் கோயில் திருவிழாக்களில் பங்கேற்பதற்கு உலகத்தின் எந்த பகுதியில் வசித்தாலும் சொந்த கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்து திருவிழாவில் உற்சாகமாக பங்கேற்கின்றனர். கிராமம் முழுவதும் திருவிழா காட்சியாக காணப்படும்.
நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடத்திய பாரம்பரிய நிகழ்ச்சிகளை இன்றும் அதேபோல சிலம்பாட்டம், கிட்டி அடித்தல், பறை இசை, கோலாட்டம், காவடி என அனைத்தையும் இப்போதும் செய்து கொண்டாடுகின்றனர். கிராமத்தின் அனைத்து தெருக்களையும் ஒவ்வொரு பகுதியாக பிரித்து, தனித்தனி குழுவாக கோவிலின் முன்பு இவர்கள் வந்து கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
எந்த குழுவிற்கு பார்வையாளர்கள் அதிகம் இருக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், உயர் பதவியில் வகிப்பவர்களாக இருந்தாலும் சொந்த ஊர் கிராமவாசியாகவே இந்த திருவிழாவிற்கு வருகின்றனர்.
திருவிழாவில் காவல்துறையினர் சீருடையில் வருவது தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் கிராமத் திருவிழாவில் எந்தவிதமான சண்டை சச்சரவுகளும் ஏற்படாது. அதனால் காவல்துறையினரும் சாதாரண உடைகளிலேயே இவ்விழாவில் பங்கேற்க அன்பு வேண்டுகோள் விடுத்து கிராமத்தினர் திருவிழாவை ஒற்றுமையாக நடத்துகின்றனர்.
இந்த ஆண்டும் வெகு விமர்சையாக நடத்தப்பட்ட மாரியம்மன் மற்றும் மலையேறி அம்மன் கோவில் திருவிழாவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த கண்ணந்தங்குடி கிராமவாசிகள் திருவிழாவில் பங்கேற்று சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இந்த திருவிழா குறித்து அப்பகுதியை சேர்ந்த கமலவேணி என்பவர் கூறும்போது, தங்களது ஊரில் நடைபெறும் இந்த திருவிழாவில் உலகம் முழுவதும் உள்ள கண்ணை வாழ் மக்கள் இந்த திருவிழாவிற்கு வந்திருந்து சிறப்பிப்பார்கள். வழக்கம்போல் குழந்தைகள் திருவிழாவில் கோலாட்டம் ஆடுவார்கள்,
ஆனால் இந்த ஆண்டு பெண்கள் கோலாட்டம் ஆடியுள்ளனர், காரணம் வருங்கால சந்ததியினர் பாரம்பரிய கோலாட்ட கலை நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்வதற்காக கோலாட்டம் ஆடியுள்ளதாக தெரிவித்தார். மேலும் சக்திவேல் என்பவர் கூறும் போது தங்களது ஊரில் உள்ள இளைஞர்கள் சிறுவர்கள் மகளிர் என அனைவரும் ஒன்று சேர்ந்து கிட்டி அடித்தலை சிறப்பாக நடத்துவோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 108 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு சிறப்பு நிகும்பலா யாகம்.. அமாவாசை சிறப்பு வழிபாடு!