உணவக பார்க்கிங்கில் நுழைந்த காட்டு யானைகள்: அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்...
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: மேட்டுப்பாளையம் உதகை சாலையில் அண்மை காலமாக புதிது புதிதாக ஏராளமான கடைகள் உருவாகி வருகின்றன. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், அனுமதி கிடைக்காது என்ற போதிலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இது போன்ற கட்டடங்கள் முளைக்கின்றன.
இதனால் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து நெல்லிமலை வனப்பகுதிக்குள் செல்ல சாலையை கடக்கும் காட்டு யானைகளின் வலசை பாதை தடைபட்டு வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் 'பாகுபலி' என்று பொதுமக்களால் அழைக்கப்படும் காட்டு யானை மற்றொரு ஆண் யானையுடன் உலவி வருகிறது. இந்நிலையில் நேற்று அந்த யானைகள் மேட்டுப்பாளையம் வனத்தில் இருந்து உதகை சாலையினை கடந்து செல்ல முயன்றன. அப்போது அந்த சாலை வழியாக அரசு பேருந்து ஒன்று வந்தது.
ஆனால் அந்த பேருந்தை ஏதும் செய்யாமல் அந்த யானைகள் அருகில் இருந்த பிரபல தனியார் ஹோட்டல் கார் பார்க்கிங் பகுதிக்கு நுழைந்தன. இதனை சற்றும் எதிர்பார்த்திராத அங்கிருந்தவர்கள் 2 காட்டு யானைகள் திடீரென வருவதை கண்டு அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து தகவலறிந்து பின் தொடர்ந்து வந்த வனத்துறையினர் யானைகள் யாரையும் தாக்காத வண்ணம் பொதுமக்களை எச்சரித்து பாதுகாப்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து யானைகளை பத்திரமாக சாலையை கடக்க செய்து மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டன. மேட்டுப்பாளையத்தில் அண்மை காலமாக அதிகரித்து வரும் யானை வழித்தட ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது யானைகள் மக்கள் கூடும் இடங்களில் உலவும் நிலை உருவாகியுள்ளது வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.