"ஒற்றுமையே வலிமை: டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் படங்கள்" - வைரலாகும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்த பேனர்!
🎬 Watch Now: Feature Video
தேனி: தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, டிடிவி தினகரன் அணி என அதிமுக, மூன்றாக பிரிந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக தலைமை யாருக்கு என்ற போட்டியில் அதிமுக பொதுக்குழு கூட்டம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று எல்லாம் ஒருவர் மாறி ஒருவரென சென்று வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்ததும், அந்த குழுவில் கொண்டுவரபட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் தீர்ப்பளித்தது. இதனைத்தொடர்ந்து, ஈபிஎஸ் அணியினர் அடுத்தகட்டாக, அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை அறிவித்ததோடு, தேர்தல் அலுலர்களாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை நியமித்தது.
இதனிடையே ஓபிஎஸ் அணியினர், தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதையடுத்து சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் ஓரணியில் திரட்டும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, அதிமுக ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுடன் சந்தித்து ஒன்றிணைந்து செயல்படுவோம் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெரியகுளம் தென்கரை பகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளரான முத்து என்பவர் இன்று (மார்ச்.19) ஜெயலலிதா படத்துடன் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் புகைப்படங்களுடன் 'ஒற்றுமையே வலிமை, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, கழகத் தொண்டர்களே வாருங்கள்.. ஒன்றிணைவோம்' என்ற வாசகத்துடன் பேனர் வைத்துள்ளார். மேல்மங்கலத்தைச் சேர்ந்த முத்து என்ற இந்த நபருக்கு, ஓ.பன்னீர்செல்வத்தால் அதிமுகவின் தேனி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் படங்களுடன் பெரியகுளத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.