திருச்சி மலைக்கோட்டை சித்திரைத்தேர் திருவிழா - தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்! - மலைக்கோட்டை தேரோட்டம்
🎬 Watch Now: Feature Video
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா, தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வந்தது.
மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று ( மே 3 ) நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் மேஷ லக்கனத்தில் சுவாமி-அம்பாள் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு மலைக்கோட்டை உள் வீதி வழியாக 5.40 மணிக்கு தாயுமானசுவாமி உடனுறை மட்டுவார் குழலம்மை பெரிய தேரிலும், தாயார் சிறிய தேரிலும் எழுந்தருளினார்.
பின்னர் 6 மணிக்கு திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சிறிய சப்பரத்தில் முன்னே செல்ல, அதைத் தொடர்ந்து கோயில் யானை லட்சுமியும் செல்ல, பெரிய தேரையும், சிறிய தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதற்காக திருச்சி மலைக்கோட்டையைச் சுற்றி உள்ள 4 வீதிகளிலும் தேர் செல்ல ஏதுவாக சாலைகளில் இருந்த பள்ளங்களை சீர்செய்து தயார் நிலையில் வைத்திருந்தனர். மேலும் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Koovagam: விமர்சையாக நடந்த கூவாகம் சித்திரை திருவிழா.. திருநங்கைகள் உற்சாக நடனம்!