Coutrallam Falls: ஞாயிறு விடுமுறையில் குற்றால அருவிகளில் அலைமோதிய கூட்டம்! - ஞாயிறு விடுமுறையில் குற்றாலம்
🎬 Watch Now: Feature Video
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலமான குற்றாலத்தில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் சீசன் களைகட்டும். இந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருவார்கள். அதன்படி, இந்த ஆண்டும் குற்றாலத்தில் சீசன் களைகட்டி வருகிறது.
கடந்த வாரம் தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து அதிகமாக கொட்டி வந்தது. தற்போது சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், அனைத்து அருவிகளிலும் தண்ணீரின் வரத்து சற்று குறைந்து மிதமான அளவில் கொட்டி வருகிறது.
இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் உற்சாகத்துடன் குளித்து வருகின்றனர். இன்று(ஜூலை 16) வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளிக்கும் சூழல் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.