தொடர் விடுமுறை களைகட்டிய வேடந்தாங்கல்.. முப்பதாயிரம் பறவைகளைப் பார்க்கக் குவிந்த பார்வையாளர்கள்!
🎬 Watch Now: Feature Video
செங்கல்பட்டு: தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் விளங்கி வருகிறது. தமிழக அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. அக்டோபர் மாதம் துவங்கித் தொடர்ந்து மூன்று நான்கு மாதங்கள் வரை உலகின் பல நாடுகளில் இருந்தும் பலவிதமான பறவைகள், வேடந்தாங்கலுக்கு வந்து, குஞ்சு பொறித்து, தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் செல்வது வழக்கம்.
அந்த வகையில் இந்தப் பருவ காலத்தில், உலகின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் 30 ஆயிரம் பறவைகள் வரை வேடந்தாங்கலுக்கு வந்துள்ளன. கடந்த வருடத்தைப் போல் இல்லாமல் இந்த வருடம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நல்ல மழைப்பொழிவு இருந்ததால் வேடந்தாங்கல் ஏரிக்கும் நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. இதனால் ஆஸ்திரேலியா, பர்மா, பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற பல பல்வேறு நாடுகளில் இருந்தும் பல வகைப் பறவைகள் தற்போது இன விருத்தி செய்வதற்காக வேடந்தாங்கலுக்கு வந்துள்ளன.
குறிப்பாக அரிவாள் மூக்கன், நத்தை குத்தி நாரை, வர்ண நாரை, கூழைக்கடாய், பாம்புத்தாரா உள்ளிட்ட ஏராளமான பறவைகள் இங்கு வந்துள்ளன. தற்போது தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மூன்று முதல் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறையைக் கொண்டாடத் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் வேடந்தாங்கலுக்கும், இன்று (ஜன.17) ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்து பறவைகளைக் கண்டு ரசித்தனர். பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகையை ஒட்டி மாவட்ட நிர்வாகம் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. வனத்துறையினர் சார்பாகக் கழிப்பறை வசதி பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மதுராந்தகம் காவல் துறை சார்பாகப் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.