தொடர் கனமழை எதிரொலி: கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
🎬 Watch Now: Feature Video
Published : Dec 18, 2023, 10:28 AM IST
தேனி: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்புப் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வட்டக்காணல், வெள்ள கெவி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (டிச.17) பிற்பகலில் துவங்கிய மழை இரவு முழுவதும் பெய்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுதும் தொடர் கனமழை பெய்து வரும் காரணத்தால், கும்பக்கரை அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி, கும்பக்கரை அருவியில் குளிப்பதற்குத் தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்துள்ளனர்.
அதாவது கடந்த நவ.3ஆம் தேதி முதல் அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். அதனைத் தொடர்ந்து பெய்த பருவ மழை காரணமாக அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் நீரின் அளவு குறையாத நிலையில், சுமார் 43 நாட்களாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த 43 நாட்கள் பின்னர் நேற்று முன்தினம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வனத்துறையினர் அருவியில் குளிக்கத் தடை விதித்துள்ளதுள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர் வரத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.