மீண்டும் குதூகலமான கும்பக்கரை அருவி.. ஆர்ப்பரிக்கும் அருவியில் சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம்.. - theni news
🎬 Watch Now: Feature Video
தேனி: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர்வரத்து வருகிறது. ஆனால், கடந்த 30 நாட்களுக்கு மேலாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முற்றிலும் மழை பொய்த்துப் போனதால், அருவியில் நீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் தற்போது இரண்டு தினங்களாக மீண்டும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் நீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது கோடை காலத்தில் அடிக்கும் வெயிலை போன்று வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், வார விடுமுறை தினங்களில் நீர் நிலைகளை சுற்றுலா பயணிகள் அதிக அளவில் நாடி வருகின்றனர்.
மேலும், இன்று (ஆகஸ்ட் 13) ஞாயிறு விடுமுறை தினம் என்பதாலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தாலும், வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க கும்பக்கரை அருவிக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காலை முதல் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரில், சுற்றுலாப் பயணிகள் குளித்து வெப்பத்தின் தாக்கத்தை தணித்து வருகின்றனர்.