தி.மலை அருகே திடீரென வேப்பமரத்தில் வடிந்த பால்.. மரத்திற்கு அபிஷேகம், தீபாராதனை காட்டிய மக்கள்.. - பொதுமக்கள் வழிபாடு
🎬 Watch Now: Feature Video
Published : Jan 12, 2024, 4:12 PM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், களர்பாளையம் அருகே உள்ள வேப்ப மரத்தில் திடீரென பால் வடிந்தது. இதனை அவ்வழியாகச் சென்ற சிலர் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். மேலும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர், அங்குத் திரண்டு வேப்ப மரத்தில் அம்மன் இருப்பதாகவும், அதனால், பால் வடிவதாகவும் பேசிக் கொண்டனர். இதனால், அந்த மரத்திற்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பித்து பொதுமக்கள் வழிபட்டனர்.
அந்த வகையில், அப்பகுதி கிராம மக்கள் மரத்திற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தும், மரத்திற்கு அருகே கோலமிட்டு, அலங்கரிக்கப்பட்டு பக்தி பரவசத்துடன் ‘ஓம் சக்தி, ஓம் சக்தி’ என முழக்கமிட்டும், கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
மேலும், வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்ததைத் தொடர்ந்து, இங்கு ஓம் சக்தி அம்மன் அமைந்துள்ளதாகவும் பெண்கள் சாமி வந்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, அங்கு ஓம் சக்தி படத்தை வைத்து வழிபட்டனர். இது குறித்துத் தகவலறிந்த சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், இதனைப் பார்க்க, அப்பகுதியில் திரண்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.