உங்களுக்கு ஒரு நியாயம்.. எங்களுக்கு ஒரு நியாயமா..? - விளம்பர விவகாரத்தில் அதிமுக, திமுக மோதல்!
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில், இதற்காக கந்திலி ஒன்றியம் வெங்கடாபுரம் அருகே திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் இருக்கும் பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் 'அதிமுக மாநாடு' தொடர்பாக விளம்பர வர்ணங்கள் தீட்டும் பணி மாவட்ட அதிமுக சார்பில் நடந்தது.
இந்த நிலையில், திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சீனிவாசன் உத்தரவின் பெயரில் சாலைப் பணியாளர்கள் சுவர் விளம்பரங்கள் எழுதக்கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிமுக நகர செயலாளர் டி.டி.குமார், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திருப்பதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் என 30-க்கு மேற்பட்டோர் அங்குத் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, 'திமுகவினர் மட்டும் உதயநிதி ஸ்டாலின் வருகை சம்பந்தமாகத் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பாலங்களில் விளம்பரம் எழுதுகிறார்கள். நாங்கள் மட்டும் எழுதக் கூடாதா? என்று கேள்வியெழுப்பினர். ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம் எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயமா? முதலில் திமுகவினரை அழிக்கச் சொல்லுங்கள்.. பின்பு நாங்கள் அழிக்கிறோம் என்றனர். எங்களைத் தடுத்தால் தீக்குளிப்பு இருக்கும் என்றும் சாலை மறியல் இருக்கும் என்றும் தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து எழுதப்பட்ட இடத்தை மட்டும் விட்டுவிடுகிறோம் என்று நெடுஞ்சாலைத் துறை சார்பாகக் கூறப்பட்டதால் பின்பு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.