திண்டுக்கல்: ராஜா குளத்தில் மீன்பிடி திருவிழா: 15 கிலோ வரை மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!
🎬 Watch Now: Feature Video
Published : Oct 15, 2023, 5:46 PM IST
|Updated : Oct 15, 2023, 6:15 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து ஊராட்சிக்குட்பட்ட நல்லாம்பட்டி கிராமத்தில் ராஜா குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் அருகே வடக்கு முனியப்பன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா கொண்டாடப்படும். திருவிழாவின் ஒரு பகுதியாக குளத்தில் மீன்பிடித் திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று (அக்.15) முனியப்பன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு குளத்தில் மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. முன்னதாக குளக்கரையில் உள்ள கன்னிமார் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து ஊர் நாட்டாமை துண்டு விசி மீன் பிடித் திருவிழாவை துவங்கி வைத்தார்.
ஏற்கனவே குளக்கரையில் தயாராக இருந்த நல்லாம்பட்டி, தோட்டனூத்து, வாழைக்காய் பட்டி, கல்லுதாம்பட்டி, சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி, நத்தம், செந்துறை ஆகிய பகுதியினைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த வலைகளை வீசி மீன்களை பிடித்தனர்.
அதில் ஒன்றரை கிலோ முதல் 15 கிலோ வரையிலான ரோகு, கட்லா, ஜிலேபி, புல்லுக்கண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தன. மேலும் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே மீன்கள் கிடைத்ததால் மீன்பிடி திருவிழாவிற்கு வந்திருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். இந்த மீன்பிடி திருவிழாவை காண்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.