ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம் - Today Thoothukudi news
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி : ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தரகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்பாளுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வாகனங்களில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று (ஏப்.3) நடைபெற்றது. சிறிய தேரில் ஸ்ரீ மகா கணபதி, முருகப்பெருமான் வீற்றிருக்க பெரிய தேரில் ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் வீற்றிருக்க தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தேரோட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி மற்றும் ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு தேருக்கு முன்பாக சிவன் வேடமணிந்து கலைஞர்கள் களியல் ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், உறுமி மேளம், தப்பாட்டம் ஆடினர். மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கிலான மக்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.