தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் - கனிமொழி எம்.பி.
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் எட்டயபுரம் சாலையிலுள்ள கலைஞர் அரங்கத்தில் வைத்து நினைவு தினம் நடைபெற்து. இதனை, திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் உள்ளிட்ட திமுகவினர் உயிர் நீத்தவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தூத்துக்குடி மண்ணையும், வருங்கால குழந்தைகளின் எதிர்காலத்தையும், சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்க வேண்டும் எனப் போராடிய மக்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்து தியாகம் செய்திருக்கிறார்கள்.
அவர்களின் 5ஆவது நினைவுநாளை மனதில் ஏந்தி, அந்தப் போராட்டத்தின் உரிமைகளுக்காக அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற உறுதியை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதும் அவர்களுக்கு துணை நின்று சில நாட்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசு இந்த மண்ணின் மக்களுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறது. வழக்காடு மன்றத்திலும் மக்களோடு துணை நின்று வருகிறது. தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு கூடிய விரைவில் வெற்றி கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு உச்சி மாநாடு - பிரதமர் மோடி அறிவித்த ஆக்ஷன் பிளான்!