சிறு,குறு தொழில்களுக்கு பட்ஜெட்டில் பெரிதாக அறிவிப்புகள் இல்லை... சிறு,குறு தொழில் முனைவோர் - பட்ஜெட் கூட்டத் தொடரில் நிலை கட்டணம் வாபஸ்
🎬 Watch Now: Feature Video
கோவை: இன்று நடைபெற்ற தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் கோவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், 9 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில்வே சேவை என்கிற அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதலமைச்சருக்கு கோவை மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவை மாநகரம் என்றாலே போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம் எனக் கூறப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு 2009இல் நான் கோவை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட காலத்தில் இருந்து மெட்ரோ ரயில் சேவையின் அவசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இதன் தொடர்ச்சியாக 2013ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் நிபுணர் ஸ்ரீதரனை கோவை மாவட்டத்திற்கு வரவழைத்து மெட்ரோ ரயில் சாத்தியங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வைத்தோம்.
கோவையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக அன்றே உறுதிப்படுத்தினோம். ஆனால், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கடந்த அதிமுக அரசு இதனைக் கிடப்பில் போட்டது. தற்போது தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில், கோவையில் 9 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் அவிநாசி சாலை - சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது’ எனக்குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, கோவையில் 172 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா, கோவையில் புதிய சிப்காட் பூங்காக்கள், உள்ளிட்ட அறிவிப்புகள் என அறிவித்திருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது.
2023 - 24ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை கோவை சிறு,குறு தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர். இந்த பட்ஜெட் பன்முகம் கொண்டதாகவும், பல்வேறு துறைகளில் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கிறது எனவும், பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம் எனவும் தெரிவித்தனர்.
குறிப்பாக கோவை மெட்ரோ ரயில் திட்டம், செம்மொழிப் பூங்கா ஒதுக்கீடு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்தனர். தொழில்துறையைப் பொறுத்தவரை பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. 1509 கோடி ரூபாய் மதிப்பில் சிறு,குறு தொழில் வளர்ச்சிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
அம்பேத்கர் திட்டத்தின் மூலம் 1000 கோடி ரூபாயும், தொழில் துறைக்கு மானியம் 142 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம் எனவும் பெண்களின் வளர்ச்சிக்காக தனித்திட்டமும் வரவேற்கத்தக்கது என தெரிவித்தனர்.
அதே வேளையில் 'தொழில்துறையைப் பொறுத்தவரை மின்கட்டண உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிலை கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்திருந்தோம். இனிவரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிலை கட்டணம் வாபஸ் பெறுவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்' எனவும் தெரிவித்தனர்.
சிறு,குறு நிறுவனங்களுக்கு தனியாக தொழிற்பேட்டை ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற கோரிக்கைக்கு வரக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது எனத் தெரிவித்த தொழில் முனைவோர், தொழில்துறையைப் பொறுத்தவரை பொதுவான கோரிக்கைகளை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்து இருக்கிறது.
அதே வேளையில் சிறுகுறு தொழில்களுக்கு பெரிய அளவில் அறிவிப்புகள் எதுவும் இல்லை எனவும், வருங்காலத்தில் இவற்றை பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம் எனவும் சிறு,குறு தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர்.