கார் கண்ணாடியை உடைத்து ரூ.1.30 லட்சம் திருட்டு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை! - பணம் திருட்டு
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர் மாவட்டம் காக்கலூர் நியூ மாருதி டவுன் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர், காஞ்சிபுரம் நகர காவல் நிலையத்தில் முதல் நிலை குற்றப்பிரிவு காவலராக பணிபுரிந்து வருகிறார். தனது மகள் பிரசவ செலவிற்காக வங்கியில் தனிநபர் கடனாக ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக் கொண்டு தனது காரில் வைத்துள்ளார்.
பின்னர், காக்களூர் பகுதியில் உள்ள யூகோ வங்கி எதிரில் காரை நிறுத்திவிட்டு காரில் இருந்த ஒரு லட்சத்தை 50,000 பணத்தில் 20 ஆயிரம் பணத்தை திருவள்ளூர் பஜார் வீதியில் அமைந்துள்ள நகைக்கடையில் நகையை மீட்பதற்காக எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு யூகோ வங்கிக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் திருவள்ளூர் வங்கியில் இருந்து மணிகண்டனை பின் தொடர்ந்த இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு அடையாளம் தெரியாத இளைஞர்கள், காரை நோட்டமிட்டு லாவகமாக காரின் கண்ணாடியை உடைத்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரொக்க பணத்தை திருடிச் சென்றனர்.
பின்னர், வீட்டிற்குச் செல்வதற்காக காரின் அருகே மணிகண்டன் சென்றபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது போன்ற திருட்டு சம்பவங்களை தடுக்க காவல் துறையினர், சாலையோரம் பகுதிகளிலும் வங்கிகளிலும் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரூரில் செந்தில் பாலாஜி ஐடி அதிகாரிகள் கார் மீது தாக்குதல்.. எஸ்.பி.அலுவலகத்தில் தஞ்சம்.. நடந்தது என்ன?