Vellore: திடீரென காலில் விழுந்த பெண்.. அதிர்ந்து போன கலெக்டர்!
🎬 Watch Now: Feature Video
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை குறை தீர்ப்புக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து தங்களுடைய கோரிக்கைகளான, முதியோர் ஓய்வூதியம், வீட்டு மனைப் பட்டா, நிலம் தொடர்புடைய பிரச்னை, அரசு அலுவலர்கள் மீதான புகார்கள் என பலதரப்பட்ட கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக அளித்து வருகின்றனர்.
இதனைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பட்டா கோரி மனு அளிக்க வந்த பெண், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனின் காலில் திடீரென விழ முற்பட்டபோது, அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் பெண்ணை தடுத்து நிறுத்தி, தன்னுடைய தலையில் அடித்துக்கொண்டு காலில் விழும் வேலையெல்லாம் கிடையாது என்றார்.
அருகில் இருந்த அரசு அதிகாரிகள் அந்தப் பெண்ணிடம் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி அனுப்பி வைத்தனர். திடீரென மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து வீட்டுமனைப் பட்டா கேட்க வந்த பெண்ணால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.