தஞ்சாவூர் மாநகராட்சியின் ஓராண்டு சாதனையா.? மேயரின் சுய விளம்பரமா.? கையேடு விநியோகம்.!
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. அதில் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த ராமநாதன் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளது. இதனை ஒட்டி தஞ்சாவூர் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கையேடு அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்த கையேட்டினை மேயர் ராமநாதன், தஞ்சை மங்களபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் பேண்டு வாத்தியங்கள் முழங்க, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஊர்வலமாக வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வழங்கி உள்ளார். ஆனால், இந்த கையேட்டில் மேயர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் அவர் கூறிய செய்திகள் ஆகியவை பிரபல செய்தித்தாள்களில் வந்ததை 34 பக்கங்களில் அச்சிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த செய்திகளில் வந்தவை இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளதாகவும், அதில் 3,000 கேமராக்கள் பொருத்தும் திட்டம், இலவச ஆம்புலன்ஸ் சேவை, அடுக்குமாடி குடியிருப்பு திட்டம், சீமைக்கருவேல மரங்கள் ஒழிப்பு உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும், பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க ‘ஸ்மார்ட் தஞ்சை’ என்ற செயலி தொடங்கப்பட்டு அதுவும் செயல்படாமல் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், ஓராண்டு சாதனையாக மேயர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் மட்டும் 55,000 பிரதிகளாக அச்சடிக்கப்பட்டு வழங்கி உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.