தஞ்சை பெரிய கோயிலில் சனி மகா பிரதோஷம் விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் - மகா சனி பிரதோஷம்
🎬 Watch Now: Feature Video
தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலுக்கு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் வந்திருந்து கோயிலில் சுவாமியை தரிசனம் செய்தும் அங்குள்ள கட்டடக் கலையையும் பிரம்மிப்புடன் கண்டுகளித்தும் வருகின்றனர்.
பெரிய கோயிலில் மகாநந்தியம் பெருமானுக்கு மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறும். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் மாசி மாதம் வளர்பிறை சனி பிரதோஷம் மிகவும் விஷேசமானது. அந்த வகையில், நேற்று (மார்ச்.4) மாசி மாத மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலில் அமைந்துள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்பட்டன.
நந்தியம் பெருமானுக்கு பிடித்த வில்வ இலை கொண்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல இசைக்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பக்தர்களால் வழங்கப்பட்ட திரவியப் பொடி, அரிசி மாவு பொடி, மஞ்சள், தேன், பால், தயிர், பழவகைகள், கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து நந்தியம் பெருமானுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.
சனிக்கிழமை பிரதோஷம் காண்பதால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், சகல தோஷங்களும் விலகும், கல்வி செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னேற்பாடாக கோயிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.