தைத்தேரோட்டம்..கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் கொடியேற்றம்! - Thaipongal
🎬 Watch Now: Feature Video
Published : Jan 7, 2024, 10:35 AM IST
தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் பத்து நாட்களுக்கு நடைபெறும் தைப்பொங்கல் தேரோட்டத் திருவிழா இன்று (ஜவ.7) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் தைப்பொங்கல் தேரோட்டத் திருவிழா (எ) ஸங்க்ரமண பிரம்மோற்சவம் பெருவிழா பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டு தேரோட்டம் தை 1 ஆம் தேதி பொங்கலன்று நடைபெறுவதையொட்டி, இன்று கொடியேற்றப்பட்டது.
இந்நிகழ்வில், கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர மேளதாளம் முழங்க, கருடாழ்வார் திருவுருவம் வரையப்பட்ட கொடிக்கு நட்சத்திர ஆர்த்தி செய்து ஏற்றி வைக்கப்பட்டது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் சாரங்கபாணிசுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவி தாயார்கள், கொடிமரம் அருகேயுள்ள தேசிகன் சன்னதியில் மகாதேசிகருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதனைத்தொடர்ந்து, இன்று முதல் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் 15 ஆம் தேதி தைப்பொங்கல் நன்னாளில், திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து, உத்ராயண வாயில் திறப்பும் நடைபெறுகிறது. நிறைவாக, 16ஆம் தேதி, பெருமாள் திருவடி திருமஞ்சனம், த்வாதச திருவாராதனம் கண்டருளலுடன் இவ்வாண்டிற்கான தைப்பொங்கல் தேரோட்டத்திருவிழா நிறைவு பெறுகிறது.