தென்காசியில் சீமான் உள்ளிட்ட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
🎬 Watch Now: Feature Video
தென்காசி: சங்கரன்கோவிலில் கடந்த 16ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் சங்கரன்கோவில் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி தொண்டர்களுடன் தென்காசியிலிருந்து புளியங்குடி வழியாக சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது வடக்குப்புதூர் கிராமத்திற்கு வந்ததும் கட்சியினர் அவருக்கு வரவேற்பு அளித்துள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அருகில் உள்ள தனியார் கல்குவாரியில் கனிம வள கொள்ளை நடைபெறுவதாகவும், அங்குச் சென்று பார்வையிட வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மாதவன் மற்றும் போலீசார், அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் அதில் நிறையப் பிரச்சனைகள் உள்ளது என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வலியுறுத்தியுள்ளனர் அதையும் மீறி தொடர்ந்து சீமான், அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தனியார் கல்குவாரிக்குச் சென்றனர்.
அங்கு கல்குவாரி கேட் அடைக்கப்பட்டிருந்ததால் அதைத் தள்ளி விட்டு அத்துமீறி உள்ளே புகுந்தனர். அப்போது அங்கிருந்து ஊழியர்கள் அவரை தடுத்துள்ளனர். ஏற்கனவே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும் உள்ளே செல்ல அனுமதி அளிக்கவில்லை. இதனால் அங்கிருந்த ஊழியர்களுக்கும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் வடக்குபுதூரை சேர்ந்த பரமசிவம் மகன் சண்முகச்சாமி (47) காயமடைந்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 13 பேர் ( அய்யாத்துரை, பெரியதுரை, ராமர், சிவராமன்,சதிஷ், தங்கவேல் உட்பட) ஆகியோர் மீது சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது உத்தேச பயணத் திட்டத்தில் இல்லாத நிகழ்வில் பங்கேற்றதும், அவர் அவர் மீது வழக்குப் பதிவு செய்ததும் அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டீ, பிஸ்கட்டுக்கு மாதம் ரூ.30 லட்சம் செலவு செய்த பஞ்சாப் அரசு.. ஆர்டிஐ மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!