பயிரிடும் போதே என்எல்சி நிர்வாகம் தடுத்து இருக்கலாம்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை கருத்து - ஆளுநர் தமிழிசை
🎬 Watch Now: Feature Video
கடலூர்: காரைக்கால் மருத்துவமனையை மேம்படுத்துவதற்கும், காரைக்காலில் குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக வந்த தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சிதம்பரம் நடராஜரை கோயிலில் இன்று (ஜூலை 30) தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “வாரணாசியில் கோயில்களை எல்லாம் எப்படி பராமரிப்பது என்று மாநாடு நடைபெற்றது. அப்போது சிதம்பரம் கோயிலை சார்ந்தவர்களை சந்தித்தேன். தமிழகத்தில் ஒரு விளக்கு கூட போட முடியாத நிலையில் பராமரிப்பு இல்லாமல் பல கோயில்கள் உள்ளது. எல்லா கோயில்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஆன்மீகம் இல்லை என்றால் தமிழ் இல்லை தமிழை வளர்த்ததே ஆன்மீகம் தான். ஆண்டாள் வளர்க்காத தமிழா? நாயன்மார்கள் வளர்க்காத தமிழா? ஆனால் தமிழகத்தில் உள்ள ஒரு பிரச்சனை ஆன்மீகத்திற்கும் தமிழுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை போலும் தமிழை வளர்த்தவர்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள் இல்லை என்பது போலும் ஒரு தோற்றத்தை உருவாகியுள்ளது. அந்த தோற்றம் களையப்பட வேண்டும்.
நெய்வேலியில் பயிர்களை அழித்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. நிர்வாக ரீதியாக இதில் ஏதோ தவறு நடைபெற்று உள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலம் என்றால் அதில் பயிர் செய்ய அனுமதித்தது ஏன்? பயிர் செய்யப்பட்ட நிலையில் அவை அறுவடை செய்யப்படாத முன்பே அவற்றை அழித்தது கண்டிப்பாக தவறு தான்.
பயிர் என்பது உயிர் போல் வளர்ந்த பயிரை அழிக்கக்கூடாது என்பது தான் அனைவரின் கருத்தாக உள்ளது. நிர்வாக ரீதியாக அரசாங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும், அங்குள்ள விவசாயிகளுக்கும் ஏதோ இடைவெளி ஏற்பட்டு உள்ளது. அந்த பயிர்களை வளர்த்து அழிப்பதை விட நிர்வாக ரீதியாக அதனை ஏற்கனவே தடுத்து இருக்கலாம். அதனை அவர்கள் சரி செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து” எனவும் தெரிவித்தார்.