ஓய்வூதிய உயர்வு வழங்கவில்லை என்றால் தலைமைச்செயலகத்தை முற்றுகையிடுவோம்: போக்குவரத்து ஓய்வூதியர்கள் எச்சரிக்கை - போக்குவரத்து ஓய்வூதியர் எச்சரிக்கை
🎬 Watch Now: Feature Video
சேலம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அனைத்து ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு அகவிலைப்படி உயர்வு மீட்புக் குழுவின் சேலம் மற்றும் தர்மபுரி மண்டலங்களின் விளக்க கூட்டம் ஒய்.எம்.சி.ஏ கூட்ட அரங்கில் நடைபெற்றது. தலைமை ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், 'திமுக அரசு தேர்தல் நேரத்தில் வாக்குறுதியாக அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நவம்பர் 2015 முதல் நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி உயர்வினை ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் வழங்குவதாகத் தெரிவித்தார். ஆனால் தற்பொழுது ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இதுவரை அறிவித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தபடி 2003ஆம் ஆண்டிற்குப் பிறகு போக்குவரத்துக் கழகத்தில் பணியில் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவேன் என்றும் ஸ்டாலின் கூறினார். அதனையும் நிறைவேற்றவில்லை. அரசு உடனடியாக ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் வருகின்ற மார்ச் 15ஆம் தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொள்வார்கள்' என்று கூறினார்.