காட்டை அழித்து குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு.. கிணற்றில் குதித்த இரு பெண்களால் பரபரப்பு! - protest against construction of garbage dump
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: புனல்காடு கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குப்பைக் கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையில் உள்ள 39 வார்டில் சேகரிக்கப்படும் குப்பைகள், புதிதாக அமைக்கப்பட உள்ள குப்பைக் கிடங்கில் கொட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக புனல்காடு கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் ஆறு ஏக்கர் பரப்பளவில் காட்டை அழித்து அந்த இடத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதனைக் கண்டித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம், சமைத்து உண்டு போராட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை, தலைகீழாக நின்று போராட்டம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இதனால் குப்பைக் கிடங்கு அமைக்கும் இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்நிலையில் இன்று (ஜூன் 19) மீண்டும் குப்பைக் கிடங்கு அமைக்க உள்ள இடத்தில் காவல்துறை உதவியுடன் மாவட்ட நிர்வாகம் சுற்றுச்சுவர் கட்டும் பணியைத் தொடங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்களான குமாரி மற்றும் நிர்மலா, குப்பைக் கிடங்கு எதிரே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். பின்னர் காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு இரண்டு பெண்களையும் கிணற்றிலிருந்து மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தங்கள் கிராமத்தில் குப்பைக் கிடங்கு அமைந்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் எனவும், இதனால் தங்களது கிராமத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணியை மாவட்டம் நிர்வாகம் கைவிட வேண்டும் எனவும் புனல்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.