சீர்காழியில் அனைத்து ரயில்களையும் நிறுத்தாவிட்டால் மறியல்: போராட்டக்குழு முடிவு

By

Published : Mar 11, 2023, 4:43 PM IST

thumbnail

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழியாக தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு முன் இந்த ரயில் நிலையத்தில் 24 ரயில்கள் நின்று சென்றன. ஆனால், கரோனா பாதிப்புக்கு பிறகு, 17 ரயில்கள் மட்டுமே நின்று செல்வதாக பணிகள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக உழவன், மன்னார்குடி விரைவு ரயில், நாகர்கோவில்-தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்த்யோதயா அதிவிரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் நிற்பதில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர். 

இதனால், சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வர்த்தகர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. சீர்காழி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லாவிட்டால் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவினர் எச்சரித்திருந்தனர்.  

இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அர்ச்சனா தலைமையில் சமரச ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே துறையில் இருந்து திருச்சி கோட்ட இயக்க மேலாளர் ஹரிகுமார், ரயில்வே காவல் துறையினர், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சீர்காழி பகுதியை சேர்ந்த போராட்டக் குழுவினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  

கூட்டத்தில் பேசிய போராட்ட குழுவினர் "சீர்காழி பகுதியானது ஆன்மிகத தலங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. ஆனால் பெரும்பாலான ரயில்கள் இங்கு நிறுத்தப்படவில்லை என்பதால் சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை ரயில் நிலையங்களில் இறங்கி, அங்கிருந்து சீர்காழிக்கு வர வேண்டியுள்ளது. எனவே ஏற்கனவே சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று சென்ற 7 ரயில்களை மீண்டும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்" என்றனர்.  

பின்னர் பேசிய ரயில்வே அதிகாரிகள், "மன்னார்குடி விரைவு ரயில் உட்பட 7 ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அந்த்யோதயா ரயிலை நிறுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றனர். மே மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவினர் எச்சரித்துள்ளனர்.  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.