தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த அசூர் பகுதி அய்யனார் கோயில் தெருவில் வசிப்பவர்கள் ரமேஷ் - சாந்தி தம்பதியினர். இந்த தம்பதியினர் சமையல் வேலை செய்து கொண்டும், தட்டு வண்டி வைத்துக் கொண்டும் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு முரளி, கேசவன், கதிரேசன் ஆகிய 3 மகன்களும், துர்கா மற்றும் தேவிகா என இரு மகள்களும் உள்ளனர். 3 மகன்களும் கும்பகோணம் தாராசுரம் பகுதியில் காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களாக உள்ளனர்.
மகளில் மூத்தவரான துர்கா, தனியார் கல்லூரியில் பிஏ ஆங்கில பட்டப்படிப்பை முடித்து விட்டு, சிறு வயது முதல் தனக்கு இருந்த ஒவிய கலை மீதான ஆர்வத்தால், கும்பகோணம் கவின் கலைக்கல்லூரியில் சிற்பக்கலையில் சேர்ந்து தற்போது 3ம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார். இளைய மகள் தேவிகா, அரசு மகளிர் கல்லூரியில் பி.காம் முடித்து விட்டு தற்போது தொலைதூரக்கல்வி வாயிலாக எம்பிஏ பயின்று வருகிறார்.
இதையும் படிங்க : வயநாடு நிலச்சரிவில் பாட்டி - பேத்தியைக் காப்பாற்றிய யானை.. கோவை கலைஞர் நெகிழ்ச்சி வடிவமைப்பு! - Wayanad Elephant statue
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இறுதி நாட்களில், கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த நிலச்சரிவு, கனமழை என பேரிடரில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இந்த நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பிய பாட்டி மற்றும் பேத்தியை 3 யானைகள் பாதுகாத்த சம்பவம் அனைவரையும் மனம் நிகழச் செய்தது.
இந்த மறக்க முடியாத நிகழ்விற்கு உயிரூட்டும் வகையில், சிற்பகலை வாயிலாக 2டி சிற்பமாக, அனைவர் மனதையும் கவரும் வகையில் உருவாக்கி சாதனை புரிந்துள்ளார் மாணவி துர்கா. முதலில் களிமண்ணால் செய்து அதனை மோல்ட் செய்து பின்னர் ஃபைபரில் தத்ரூபமாக உருவாகியுள்ளார்.
இதுகுறித்து மாணவி துர்கா கூறுகையில், "சிற்பகலை வாயிலாக இந்த நிகழ்வை கொண்டு செல்ல வேண்டும் என்ற என கனவு நிஜமாகியுள்ளது. சிற்பக்கலையில் ஆண்கள் தான் சாதிக்க முடியும் என்ற நிலையில் இருந்து பல பெண்கள் எனக்கு முன்பும் இக்கலையில் தடம் பதித்துள்ளனர். அவர்கள் வழியிலும், எனக்கு பின்பும் நிறைய பெண்கள் இந்த சிற்பக்கலைத்துறையில் தடம் பதித்து வெற்றி காண வேண்டும். அதற்கு என்னால் ஆன உதவிகளை இக்கலை மீது ஆர்வம் கொண்டு பெண்களுக்கு உதவுவேன்" என தெரிவித்துள்ளார்.