"அதிகாரிகள் பேச்சை நம்பி வீடுகளை இடித்துவிட்டு நடுத்தெருவில் நிற்கிறோம்" - சிவகங்கையில் இலங்கை தமிழர்கள் வேதனை! - இலங்கை தமிழர்கள் மனு
🎬 Watch Now: Feature Video
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மூங்கிலூரணியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 32 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 186 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 52 வீடுகளுக்கு அனுமதி கிடைத்திருப்பதாகக் கூறிய அரசு அதிகாரிகள், முகாமில் உள்ள 52 குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். வீடுகளையும் இடிக்கச் சொல்லியதாகத் தெரிகிறது. அதிகாரிகளின் பேச்சை நம்பி வீடுகளை இடித்த மக்கள், அருகில் உள்ள பகுதிகளில் வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர்.
வாடகை வீடு எடுக்க வசதியில்லாதவர்கள் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். ஆனால், புதிய வீடுகள் கட்டித்தருவதாகக் கூறிய அரசு அதிகாரிகள், வீடுகள் இடிக்கப்பட்ட பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக முகாம் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தினக்கூலி வேலைக்குச் செல்லும் தாங்கள் வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருவதாகவும், அதிகாரிகளை நம்பி வீடுகளை இடித்துவிட்டு தற்போது நடுரோட்டில் நிற்பதாகவும் வேதனை தெரிவித்தனர். எனவே, விரைவில் புதிய வீடு கட்டித் தரக்கோரியும், இடைக்காலமாக நிவாரணம் வழங்கக் கோரியும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆஷா அஜித்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.