பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு சொகுசு பேருந்தில் திடீர் தீ விபத்து!
🎬 Watch Now: Feature Video
சென்னை அண்ணாநகர் மூன்றாவது அவென்யூவில் மாநகரப் பேருந்து பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பேருந்து நேற்று (ஜூலை 26) மாலை சரியாக 5.40 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அருகில் நின்றிருந்த மற்ற பேருந்துகளை பணிமனை ஊழியர்கள் அப்புறப்படுத்தி பின் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 45 நிமிடங்கள் போராடி அணைத்தனர். அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணையில், தீப்பற்றி எரிந்த பேருந்தானது TN 01 AN 2351 என்ற எண் கொண்ட குளிர்சாதனப் பேருந்து எனவும், இந்த பேருந்து சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் விரைவு பேருந்து எனவும் தெரிய வந்துள்ளது.
முன்னதாக, நேற்று காலை சென்னை வந்த பேருந்து, ஓய்வுக்காக அண்ணா நகர் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும் நேற்று இரவு மீண்டும் பெங்களூரு செல்வதற்கு தயாராக இருந்தது எனவும் தெரிய வந்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பேருந்தில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்று அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் பேருந்தானது முழுவதும் எரிந்து நாசமானது என்பது குறிப்பிடத்தக்கது