ஆம்புலன்ஸில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு.. காவல்துறை விளக்கம் என்ன? - ambulance fight in sathakudi

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 7, 2023, 7:08 PM IST

Updated : Mar 8, 2023, 12:43 PM IST

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தில் சாலக்கரை மாரியம்மன் சுவாமி மாசி மகம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சிதம்பரம் அருகே உள்ள சாமியார் பேட்டை பகுதிக்கு சுவாமி ஊர்வலம் தீர்த்தவாரி சென்றுள்ளது. பின்னர் தீர்த்தவாரி சென்ற சுவாமியானது, நேற்று இரவு (மார்ச் 6) சாத்தப்பாடிக்கு திரும்பும்போது, சுவாமியைக் கொண்டு வந்த டிராக்டரில் பல்வேறு பாடல்களும் ஒலித்துக் கொண்டே வந்துள்ளன. 

இந்த நிலையில் இந்த டிராக்டரானது மேல மணக்குடி கிராமத்தின் வழியாக சாத்தப்பாடி நோக்கிச்சென்று கொண்டிருந்தது. அப்போது டிராக்டரில் பாடல் சத்தம் அதிகமாக இருப்பதாக மேல மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர், டிராக்டரில் சென்ற மற்றொரு பிரிவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சாமி ஊர்வலம் சென்ற நிலையில், ஒரு தரப்பினர் சாமி ஊர்வலத்தில் சென்றவர்களை தேடிச்சென்று தாக்கி உள்ளனர். 

இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள், 2 இளைஞர்கள் மற்றும் ஒரு முதியவர் என ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பின்னர் இவர்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வந்தபோது, மற்றொரு தரப்பினர் வடக்கு திட்டை பகுதியில் ஆம்புலன்ஸை வழிமறித்துள்ளனர். 

தொடர்ந்து அவர்கள் ஆம்புலன்ஸின் உள்ளே ஏறி கடுமையாக தாக்கி உள்ளனர். இதனிடையே இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்‌. மேலும் கீழ மணக்குடி மற்றும் சாத்தப்பாடி ஆகிய கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அதேநேரம் நடந்த சம்பவத்தின் அடிப்படையில், இரண்டு தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 

இவ்விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்ட காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், "06.03.2023 அன்று புவனகிரி தாலுகா, சாத்தப்பாடி கிராமத்திலிருந்து மாசிமகத்தை முன்னிட்டு சாமி ஊர்வலமாக புறப்பட்டு, பரங்கிப்பேட்டை கடற்கரைக்கு சென்று தீர்த்தவாரி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்ப மேலமணக்குடி கிராமத்தின் அருகே கடக்கும்போது, இருவேறு சமூகத்தினருக்கிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக காயம்பட்டவர்கள் கொடுத்த புகாரில் புவனகிரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடனடியாக காவல்துறையினர் நடிவடிக்கை எடுத்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனக் கூறப்பட்டுள்ளது.

Last Updated : Mar 8, 2023, 12:43 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.