தஞ்சை சாரங்கபாணி கோயில் உதய கருட சேவை திருவீதி உலா தொடக்கம்! - உதய கருட சேவை
🎬 Watch Now: Feature Video
108 திவ்ய தேசங்களில் திருவரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக 3வது திருத்தலமாக சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் விளங்குகிறது. இத்திருக்கோயில் ஊழியராக இருந்து மிகப்பெரிய ராஜகோபுரத்தை கட்டுவித்த லட்சுமி நாராணயசுவாமி இறந்தபிறகு, அவருக்கு சிரார்த்தம் செய்ய வாரிசு இல்லாததால், இத்தலத்தில் பெருமாளே அவர் முக்தியடைந்த ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்ய எழுந்தருள்வதாக ஐதீகம்.
இப்பெருமாளை வழிபட வேண்டும் என வீட்டில் இருந்து ஒரு அடி எடுத்து வைத்தாலும் அவருக்கு மறுபிறப்பு என்பது இல்லை என்பதும், இத்தலத்தில் உள்ள உத்திராயண, தெட்சணாயண வாசலை கடந்து செல்லும் அனைத்து ஜீவராசிகளுக்கும் வைகுண்ட பிராப்தம் கிட்டும் என்பதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்பு பெற்ற வைணவத் தலத்தில் பவித்ரோத்சவம் கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கி கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று வந்தது. 7ஆம் நாளான இன்று (ஜூலை 28) பவித்ரோத்சவம் நிறைவாக, உற்சவர் சாரங்கபாணி பெருமாள் விசேஷ பட்டாடைகள் அணிந்து, சிறப்பு மலர் அலங்காரத்தில், வெள்ளி கருட வாகனத்திற்குள் எழுந்தருள, உதய கருட சேவை திருவீதியுலா, வேத விற்பன்னர்களின் வேத பாராயணம், சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தீபாராதனை செய்யப்பட்ட பிறகு, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, தேரோடும் வீதிகளில் உதய கருட சேவை திருவீதியுலா சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காவிரியாற்றின் சக்ரப்படித்துறைக்கு பெருமாள் எழுந்தருள, அங்கு பவித்ரோத்சவ நிறைவையொட்டி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.