‘நாட்டுல செருப்புக்கு கூட பாதுகாப்பு இல்ல’ - வீட்டில் இருந்த விலை உயர்ந்த செருப்புகள் திருட்டு.. சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை! - Chromepet Chennai
🎬 Watch Now: Feature Video
சென்னை: குரோம்பேட்டை பகுதியில் உள்ள குடியிருப்பில் திருடும் நோக்கில் வந்து வீட்டில் ஆள் இருந்ததால் வெளியில் இருந்த விலை உயர்ந்த காலணிகளை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் 2ஆவது பிரதான சாலையில் டி.டி.வி மத்வா குடியிருப்பு உள்ளது. வழக்கமாக அந்த குடியிருப்பு பகுதியில் ஆள் நடமாட்டம் என்பது இல்லாமல் காணப்படும்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த வீட்டில் இருந்தவர்கள் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த போது மின்சாரம் தடைபட்டுள்ளது. வழக்கமான மின்சார துண்டிப்பு என நினைத்து வீட்டில் இருந்த நபர்கள் சாதாரண நடைமுறைகளை மேற்கொண்டு இருந்த நிலையில், மாலை நேரமாகியும் மின்சாரம் வராததால் பக்கத்து வீட்டில் மின்சாரம் உள்ளதா என பார்த்துள்ளனர்.
அப்போது அங்கு மின்சாரம் தடைப்படாமல் இருந்ததைத் தொடர்ந்து, உடனடியாக தனது வீட்டின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதிக்குச் சென்று பார்த்தபோது அவர்கள் வீட்டின் மின் இணைப்பு அனைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வீட்டை நோட்டமிட்டவாறு வந்து மின்சாரத்தை துண்டித்து விட்டு வீட்டினுள் ஓடிக் கொண்டிருந்த டிவியின் சத்தம் நின்றவுடன் வீட்டிற்குள் ஆள் இருப்பதை உறுதி செய்து விட்டு வெளியே வைத்திருந்த விலை உயர்ந்த காலணிகளை மட்டும் திருடி செல்வது தெரியவந்தது.
அதை தொடர்ந்து, அந்த வீட்டில் இருந்த நபர்கள் உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக எடுத்துக்கொண்டு குரோம்பேட்டை காவல் நிலையம் சென்று சம்பவம் குறித்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குரோம்பேட்டை காவல் துறையினர், அந்த செருப்பு திருடனை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆம்பூர் அருகே கோயில் விழாவில் இரு தரப்பு இளைஞர்கள் மோதல்.. ஒருவர் படுகாயம்!