பழனியின் மணல் கடத்தலை தடுத்து நிறுத்திய விஏஓ.. லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு!
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே ஆயக்குடி பொன்னிமலைசித்தன் கரடு பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளி வருவதாக பொதுமக்கள் தொடர் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற ஆயக்குடி விஏஓ கருப்புசாமி மற்றும் உதவியாளர் மகுடீஸ்வரன் மீது அங்கு இருந்தவர்கள் லாரி ஏற்றி கொல்ல முயற்சித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கொலை முயற்சி தொடர்பாக ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், கொலை செய்ய முயன்றவர்களை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், அதிகாரிகளை கொல்ல முயன்ற லாரியை பறிமுதல் செய்தும், திமுக பிரமுகர்களான சக்திவேல், பாஸ்கரன் மற்றும் மேலும் இருவர் மீது அனுமதியின்றி மண் அள்ளிய வழக்கு கொலை முயற்சி, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.